சுனாமி இல்லை சு-நாமம் - அஸ்மிதா சோக்லே, ஜப்பான்

சுனாமி இல்லை சு-நாமம் - அஸ்மிதா சோக்லே, ஜப்பான்

என் கணவர் விகாஸ் சோக்லே வேலை காரணமாக ஜப்பானில் தங்கியிருக்கிறார். நான் என் ஒரு வயது மகள் அத்விகாவுடன் இந்தியாவில்தான் இருந்தேன். நான் வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன், ஆனாலும் ஜப்பானைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருந்தது. என் ஆசைப்படி கணவரும் சிரமப்பட்டு விசாவிற்கு (Visa) ஏற்பாடு செய்து என்னையும் மகளையும் ஜப்பானுக்கு வரச் சொன்னார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எங்களுடைய விமான டிக்கெட்டும் வந்துவிட்டது. நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஜப்பானுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

நான் தனியாக சின்னவளான அத்விகாவை அழைத்துக்கொண்டு ஜப்பானுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் ரொம்ப டென்ஷனாக இருந்தது. முதல் முறையாக இன்டர்நேஷனல் ஃபிளைட்டில் பயணம் செய்யப்போகிறோம் என்பதால் மனதில் ரொம்ப ஆர்வமாகவும் இருந்தது. நான் என் அத்விகாவுடன் அக்டோபர் 10, 2010 அன்று பத்திரமாக ஜப்பானுக்குப் போய் சேர்ந்தேன்.

வீட்டிற்குச் சென்றதும் இத்தனை மாதங்களுக்குப் பிறகு சந்தித்ததால் எங்களுடைய பேச்சு முடிவதற்கே இல்லை. பேசிக்கொண்டிருக்கும்போது விகாஸ் என்னிடம், "ஜப்பானில் எப்போதுமே சின்னச் சின்னதாக நிலநடுக்கம் வந்துகொண்டே இருக்கும். கொஞ்சமும் பயப்படக்கூடாது. 2-3 நிமிஷம் வீடு ஆடுவது போலத் தோன்றும். ஆனால் நீ பயப்படாதே. அந்த மாதிரி நேரத்தில் மட்டும் கேஸை ஆன் செய்யாதே, மெயின் ஸ்விட்ச்சை ஆஃப் செய்து வை. இந்த முன்னெச்சரிக்கையை மட்டும் கட்டாயம் எடு" என்று சொன்னார். அவர் வேலை காரணமாக முழு நாளும் வெளியில் இருப்பதால், என் கணவர் எனக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறினார்.

அதன்பிறகு விகாஸ் சொன்னதைப் போலவே 3-4 முறை நான் சின்னச் சின்ன நிலநடுக்கங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நான் பாப்புவின் நாமஸ்மரணையைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் இருந்த பயமும் போய்விட்டது. ஆனால் சீக்கிரமே நாம் ஒரு பயங்கரமான, உயிருக்கு ஆபத்தான இயற்கை சீற்றத்தை தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை.

நிலநடுக்கத்தைப் பற்றி நான் எப்போதுமே படித்திருக்கிறேன். ஆனால் அதைப் படிப்பது வேறு, நேரில் அனுபவிப்பது வேறு என்பதை அப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இன்றும் அந்த சம்பவத்தை நினைத்தால் தூக்கிவாரிப் போடுகிறது. என் பாப்புவின் அருளால் மட்டுமே இன்று நான் இந்த அனுபவத்தை எல்லோரிடமும் சொல்ல முடிகிறது.

அந்த நாள் வெள்ளிக்கிழமை மார்ச் 11, 2011. எனக்கு மட்டுமல்ல, முழு உலகமே தங்கள் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாள் அது. அன்றைய தினம் ஜப்பான் போன்ற ஒரு அழகான நாடு நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களால் அடியோடு உருக்குலைந்து போனது.

அன்று மதியம் சுமார் 2.30 மணி இருக்கும். நான் என் சின்ன மகளோடு வீட்டில்தான் இருந்தேன், சில நிமிஷங்களிலேயே அந்த பயங்கரமான சம்பவம் ஆரம்பமானது. நிலநடுக்கத்தின் நடுக்கம் உணரத் தொடங்கியது. நான் நினைத்தேன், எப்போது போல வீடு கொஞ்ச நேரம் ஆடும், அப்புறம் சரியாகிவிடும் என்று. ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போனது. வீடு ரொம்ப வேகமாக ஆடத் தொடங்கியது. வீட்டில் ஸ்டாண்டில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் தடதடவெனக் கீழே விழத் தொடங்கின. அந்தப் பயத்தில் என் சின்ன மகள் சத்தமாக அழ ஆரம்பித்தாள். எனக்கோ பயத்தில் உயிரே போய்விட்டது. நான் பாப்புவின் நாமஸ்மரணையை மட்டுமே செய்துகொண்டிருந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக எங்கு பார்த்தாலும் வீட்டின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இப்போது வீடு இடிந்து விழப் போகிறது, நாம் இருவரும் இன்று நசுங்கிச் சாகப் போகிறோம் என்று நினைக்கும்போதே கண்ணைக் கட்டியது. ஆனால் பாப்புவின் நாமஸ்மரணையைச் சொல்லச் சொல்ல எங்கிருந்தோ ஒரு தைரியம் வந்தது. தைரியமாக எழுந்து, எதிரில் உபாசனை போட்டோ இருந்தது, அந்த போட்டோவிற்கு முன்னால் சின்னவளை கூட்டிக்கொண்டு போய் உட்கார்ந்தேன். என் பாப்புவின் ஓம் மன:சாமர்த்யதாதா ஸ்ரீ அனிருத்தாய நம: என்ற ஜபத்தை மட்டும் வாயால் சத்தமாகச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அதிலும் மிகவும் பரிதாபமான காட்சி என்னவென்றால், என் ஒன்றரை வயது குழந்தை கூட பாப்புவைப் பார்த்தபடி கைகூப்பி அழுதுகொண்டிருந்தது.

இதை எல்லாம் பார்த்ததும் எனக்கு நெஞ்சை அடைத்தது, என் கண்களில் இருந்தும் கண்ணீர் தாரையாகக் கொட்டியது. அந்த நிலைமையிலும் நான் அவளுக்கு நிறைய முத்தங்களைக் கொடுத்தேன். கணவர் ஆபிஸில், வீட்டில் வேறு யாரும் இல்லை. என் கணவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. ஏனென்றால் எல்லா சிஸ்டமுமே ஸ்தம்பித்துப் போயிருந்தது. பாப்புவிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் வேண்டிக்கொண்டேன் - விகாஸ் எங்கே இருந்தாலும் அவரைப் பத்திரமாக வையுங்கள்!

பாப்புவைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தபோது திடீரென்று எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது, இந்த மாதிரி நிலநடுக்கம் வரும்போது வீட்டிற்குள் இருக்காமல் திறந்த வெளிக்கோ அல்லது மைதானத்திற்கோ போய்விட வேண்டும் என்று. பாப்புவின் அனிருத்தாஸ் அகாடமி ஆஃப் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் (AADM) கோர்ஸ் செய்ததால் எனக்கு இந்த நன்மை கிடைத்தது. நான் உடனே என் மகளைத் தூக்கிக்கொண்டேன். பாப்புவின் போட்டோவை எடுத்தேன். பர்ஸை எடுத்தேன். கேஸ் மெயின் சப்ளையை நிறுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். வெளியில் நிறைய ஜப்பானியர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் தூரத்திலிருந்தே என்னைத் தங்கள் பக்கம் வரும்படி சைகை செய்தார்கள். நான் ஓடியே சென்றேன். என் மகளை கூட்டிக்கொண்டு அவர்களுடன் போய் நின்றேன். வெளியில் பயங்கரமான குளிராக இருந்தது. என் மகள் பயத்தினாலும் குளிரினாலும் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்காக ஸ்வெட்டர் எடுத்து வர வேண்டும் என்பது கூட எனக்குத் தோன்றவில்லை. பாவம், அவள் அழுதுகொண்டே இருந்தாள்.

இந்த நிலநடுக்கம் 9 டிகிரி தீவிரம் கொண்டதாக இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து எல்லாம் அமைதியானது. நான் என் மொபைலில் என் கணவரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் லைன் கிடைக்கவே இல்லை. இந்தியாவிலிருக்கும் அப்பா அம்மாவையும் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். அதுவும் முடியவே இல்லை. மொபைல் நெட்வொர்க் ஜாம் ஆகியிருந்ததால் கம்யூனிகேஷன் முழுவதும் துண்டிக்கப்பட்டிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து ஓரளவு அமைதியானதும் நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, எப்படியோ மகளுக்கு ஸ்வெட்டர் கொண்டுவருவதற்காக வீட்டிற்குள் போனேன்.... அந்த நேரத்தில்தான் இரண்டாவது நிலநடுக்கம் வந்தது!

நான் எப்படியோ, கையில் கிடைத்த ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தேன். தரை முழுவதுமாக ஆடிக்கொண்டிருந்தது, உயிர் பயத்தில் என் மகளைத் தூக்கிக்கொண்டு நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் மகள் என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். பாவம், அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். இனி ஓடுவதற்கு என் கால்களில் சக்தியே இல்லை. ரோட்டில் ஆடிக்கொண்டிருந்த கரண்ட் கம்பங்கள் என் மீது விழுந்து நாம் செத்துப்போவோம் என்றுதான் எனக்குத் தோன்றியது, ஆனால் நான் சத்தமாக என் பாப்புவின் ஜபத்தை சொல்லிக்கொண்டே இருந்தேன். அதுதான் எனக்கு தைரியத்தைக் கொடுத்தது, நான் எப்படியோ மீண்டும் அந்த திறந்தவெளிக்கே வந்து சேர்ந்தேன்.

நிலநடுக்கம் தொடர்ந்துகொண்டே இருந்தது. 7, 7.4, 7.2 என்று வெவ்வேறு அளவுகளில் நிலநடுக்கங்கள் வந்துகொண்டே இருந்தன. என்ன செய்வதென்றே புரியவில்லை. மகள் அழுது அழுது ரொம்ப சோர்வாகிவிட்டாள், அவளுக்கு ரொம்ப பசியாக இருந்தது; பாவம் அப்படியே என் தோளில் தலையை வைத்துத் தூங்கிவிட்டாள்.

அந்த இடத்தில் ஒரு வயதான தம்பதியினர் தங்கள் மகனுடன் நின்றிருந்தார்கள். அவர்களும் பங்களாவிற்கு வெளியில்தான் நின்றிருந்தார்கள். அந்தத் தாத்தா எங்கிருந்தோ ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து எனக்குக் கொடுத்தார்.

கொஞ்ச நேரம் கழித்து என் கணவர் ஆபிஸிலிருந்து அவசரமாக வீட்டிற்கு வந்தார். அவரும் நடந்தேதான் வந்திருந்தார். வாகனப் போக்குவரத்து முழுவதும் தடைபட்டிருந்தது. வீட்டின் நிலைமையைப் பார்த்து அவர் பயந்துவிட்டார். அவர் வீட்டிற்குள் சென்று என்னைக் கூப்பிட ஆரம்பித்தார். ஆனால் வீட்டிற்குள் இருந்து எந்தப் பதிலும் வராததால் அவர் ரொம்பவும் பயந்துபோய் அங்கும் இங்கும் தேடிவிட்டு வீட்டின் பின்பக்கம் வந்தார். என்னையும் மகளையும் உயிரோடு பார்த்ததும் அவருடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஓடிவந்து மகளைக் கட்டிக்கொண்டார். அவளுக்கு நிறைய முத்தங்களைக் கொடுத்தார். வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை. நான் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு சந்தோஷத்தில் அழுதுகொண்டிருந்தேன். பாப்புதான் எங்கள் மூவரையும் சந்திக்க வைத்தார். எனக்கு ரொம்ப தைரியம் வந்தது.

நாங்கள் சாயங்காலம் 6.30 வரைக்கும் வெளியில்தான் நின்றிருந்தோம். நிலநடுக்கங்கள் வந்துகொண்டேதான் இருந்தன. ஆனால் அதன் தீவிரம் குறைந்திருந்தது. பிறகு மெதுவாக நாங்கள் வீட்டிற்குள் சென்றோம். வீடு முழுவதுமாக அலங்கோலமாகிக் கிடந்தது. கரண்ட் இல்லை. தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டிருந்தது. வீட்டில் ஒரு பருக்கை சாதம் கூட இல்லை, குடிக்க தண்ணீரும் இல்லை. ஏனென்றால் அங்கே 24 மணி நேரமும் தண்ணீர் வரும் என்பதால் நான் எப்போதுமே தண்ணீரைச் சேமித்து வைத்திருக்கவில்லை; அதோடு, சாயங்காலம் கணவரின் ஆபிஸில் ஒரு பார்ட்டிக்குப் போக வேண்டியிருந்ததால் நான் ராத்திரி சாப்பாடும் செய்யவில்லை, சின்னச் சின்ன நிலநடுக்கங்கள் வந்துகொண்டே இருந்ததால் என்னால் கேஸையும் ஆன் செய்ய முடியவில்லை.

வாழ்க்கையிலேயே முதல்முறையாக இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்பட்டது. வீட்டில் அரிசி பருப்பு இருந்தும் என்னால் சமைக்க முடியவில்லை. கையில் காசு இருந்தும் சாப்பிட ஏதும் வாங்கி வர முடியவில்லை. ஏனென்றால் எல்லாக் கடைகளும் மூடியிருந்தன. எங்களுக்கு எங்கள் மகளைப் பற்றித்தான் கவலையாக இருந்தது. இப்போது இப்படிப்பட்ட நிலைமையில் அவளை எப்படிச் சமாளிப்பது?

பயங்கரமான குளிராக இருந்தது. வீட்டில் எங்கும் இருட்டாக இருந்தது. டார்ச்சும் இல்லை. பொதுவாகவே ராத்திரியில் தூங்கும்போது நைட்லேம்ப் போட்டுப் பழக்கம் என்பதால், இருட்டைப் பார்த்துப் பயந்து போய் என் மகள் மீண்டும் அழத் தொடங்கினாள். நான் தைரியமாக பாப்புவின் போட்டோவிற்கு முன்னால் ஒரு விளக்கை ஏற்றினேன். நிலநடுக்கம் வந்தால் விளக்கை அணைப்பது, நிலநடுக்கம் நின்றால் மீண்டும் விளக்கை ஏற்றுவது, இப்படியே அரை மணி முக்கால் மணி நேரம் ஓடியது.

இப்படி ரொம்பவும் உதவியற்ற நிலையில் இருந்தபோது, திடீரென்று என் கணவரின் ஆபிஸில் வேலை பார்க்கும் அவருடைய ஜப்பானிய நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர் எங்களுக்காக ஒரு பாட்டில் தண்ணீர், வாழைப்பழம், மற்றும் சில தின்பண்டங்களைக் கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. பாப்புவின் போட்டோவை நன்றியோடு பார்த்துக்கொண்டு நாங்கள் கண்ணீர் விட்டோம். என் கடவுள் எவ்வளவு கருணை மிக்கவர்! இவ்வளவு நிச்சயமற்ற, அமைதியற்ற சூழ்நிலையிலும் எங்கள் கடவுள் எங்களுக்கு சாப்பாடு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். அன்று ராத்திரி வாழைப்பழமும் பாலும்தான் எங்கள் சாப்பாடு. அன்று ராத்திரி முழுவதுமாக மெழுகுவர்த்தியை ஏற்றுவதும் அணைப்பதுமாக நானும் என் கணவரும் மாறி மாறி கண் விழித்துக் கழித்தோம். நிலநடுக்கம் வந்தால் மெழுகுவர்த்தியை அணைப்பது, நின்றதும் மீண்டும் ஏற்றுவது.

எங்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு ஜப்பானிய மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. அதனால் யாருடனும் எங்களால் பேச முடியவில்லை. இந்தியாவிலும் எங்களால் யாருடனும் பேச முடியவில்லை. நியூஸ்பேப்பர், டி.வி. மூலமாக இந்த நிலநடுக்கச் செய்திகள் எங்கள் அப்பா அம்மாவிற்குப் போய்ச் சேர்ந்தன. ஆனால் அவர்களுடனும் எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. நாங்கள் குடியிருந்த பகுதியும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதை டி.வி.யில் பார்த்ததும் அவர்களும் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்கள். ஒரு பெரிய சுனாமி ஜப்பானையே மூழ்கடித்துவிட்டது என்பதை நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் அதை லைவ்வாகப் பார்த்தார்கள்கடைசியாக சனிக்கிழமை சாயங்காலம் இந்தியாவில் உள்ள எங்கள் குடும்பத்தினருடன் தொடர்புகொள்வதில் நாங்கள் வெற்றிபெற்றோம். நாங்கள் பத்திரமாக இருக்கிறோம் என்று தெரிந்ததும் அவர்களின் கண்களில் இருந்த சோகக் கண்ணீர் மறைந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் மீண்டும் கரண்ட் வந்தது. அப்போதுதான் நாங்கள் இன்டர்நெட்டில் பார்த்தோம், இது ஜப்பானிலேயே மிகப் பெரிய அதாவது 9 மேக்னிட்யூட் அளவுள்ள நிலநடுக்கம் என்று. அதன் மையம் பசிபிக் பெருங்கடலில் இருந்தது. அதனால்தான் சுனாமி வந்தது, செண்டாய் என்ற அந்த நகரத்தை சுனாமி முழுவதுமாக அழித்துவிட்டது.

நிலநடுக்கம் வந்துபோய்விட்டது, ஆனாலும் ஆபத்து இன்னும் விலகவில்லை. சுனாமி தாக்கியதால் ஃபுகுஷிமாவில் உள்ள அணு உலைகள் பழுதானதால் ரேடியேஷனும் பரவத் தொடங்கியிருந்தது. இந்த ரேடியேஷன் உடலுக்குள் சென்றால் கேன்சர் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரலாம். இந்த நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். பலரின் வாழ்க்கை அழிந்துபோனது, இதையெல்லாம் டி.வி.யில் எல்லோரும் பார்த்திருப்பார்கள்.

ஆனால் இயற்கையின் இந்தப் பெரிய தாண்டவத்திலும், பரமபூஜ்ய பாப்புமாவுலியால் மட்டுமே நாங்கள் பத்திரமாக இருந்தோம். இந்த நிலநடுக்கத்திலிருந்து எங்களை ஒரேயொருவர், எங்கள் சத்குரு பாப்பு மட்டுமே காப்பாற்றினார்.

வீட்டில் விரிசல்கள் ஏற்பட்டன. ஆனால் வீடு இடிந்து விழவில்லை. உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்த நிலைமையிலும் பாப்பு சாப்பாடு தண்ணீரைக் கொடுத்து ஏற்பாடு செய்தார். சுனாமி அலைகள் எங்கள் வரை வரவே இல்லை. பொதுவாகவே பயந்த சுபாவம் உள்ள எனக்கு அந்த நேரத்தில் தைரியமும், சக்தியும் தேவைப்பட்டது. பாப்புவின் ஓம் மன:சாமர்த்யதாதா ஸ்ரீ அனிருத்தாய நம: என்ற தாரகமந்திரம் எனக்கு சக்தியைக் கொடுத்தது.... சரியாக 108 சதவீதம் கொடுத்தது! பாப்புவால் மட்டுமே எங்கள் உயிர் தப்பியது என்று என்னால் உலகிற்கே சத்தமாகச் சொல்ல முடியும்.

முழு ஜப்பானும் இந்த இயற்கைப் பேரழிவின் கோரத் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருந்தபோது, எந்த ஜப்பானியருக்குத் தன்னுடைய இந்திய சக ஊழியருக்காகச் சாப்பாடு கொண்டுபோக நேரம் இருந்திருக்கும்? ஆனால் அந்த பரம கருணைமிக்க சத்குருமாவுலிதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார், ஏனென்றால் எங்களுடன் எங்கள் ஒன்றரை வயதுக் குழந்தையையும் அவர் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. உண்மையாகவே, அந்த நேரத்தில் ராத்திரியில் வாழைப்பழம், தண்ணீர், பால் என்று எல்லாவற்றையும் அந்த ஜப்பானியர் மூலமாக எங்களுக்குக் கொடுத்தது யார்? எங்கும் மரணம் தாண்டவமாடிக்கொண்டிருந்தபோது எங்களை மரணத்தின் வாயிலிருந்து இழுத்து வெளியில்கொண்டு வந்தது வேறு யாராக இருக்க முடியும்? பாப்பு, பாப்பு, பாப்பு மட்டுமே! அப்போது வாயிலிருந்து ஒரு வார்த்தைதான் வந்தது,

எங்கள் பாப்பு மெதுவாக எங்களுக்காக எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டிருக்கிறார்'.

அவருடைய' நாமம் வாயில் இருக்கும்போது மிகப் பெரிய சுனாமியின் சக்தி கூட ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அந்த சத்குருதத்துவத்தின் கருணையை யாராலும் தடுக்க முடியாது.

இதைவிட பெரிய சு-நாமம் வேறு என்ன இருக்க முடியும்?

                 *************

English



Comments