நான் 1996-ஆம் ஆண்டு கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ரெந்தாளிலிருந்து வேலை தேடி மும்பைக்குச் சென்றிருந்தேன். அந்தச் சமயத்தில் எனது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு சத்குரு ஸ்ரீ அனிருத்த பாப்புவைப் பற்றித் தெரியவந்தது. 2003 வரை நான் மும்பையில்தான் இருந்தேன். ஆனால், அதற்குப் பிறகு வீட்டில் உள்ளவர்களின் வற்புறுத்தலால் மீண்டும் ரெந்தாளுக்கே திரும்பி வந்தேன். நான் ரெந்தாளுக்கு வந்த பிறகு, இங்குள்ள ஒரு பிரபலமான தொழிலதிபரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். பெட்ரோல் பங்க், ஹோட்டல்கள், தங்கம்-வெள்ளியில் முதலீடு என அவருக்குப் பல தொழில்கள் இருந்தன. எனது உழைப்பையும் குணத்தையும் புரிந்து கொண்டு முதலாளி மெல்ல மெல்ல என்மிது நம்பிக்கை வைத்து முக்கியமான பொறுப்புகளைக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகுதான் அந்த பயங்கரமான சம்பவம் என் வாழ்வில் நடந்தது.
நடந்தது என்னவென்றால் -
1994-லிருந்து வருஷத்துக்கு ஒருமுறை 5 முதல் 6 நாட்கள் வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு நான் சாமி தரிசனத்திற்காக பண்டரிபுரம், காங்காபூர் போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்று வருவது வழக்கம். அதேபோல இந்த முறையும் 2008 ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 11 வரை முதலாளியிடம் முன்னாடியே சொல்லி முறைப்படி விடுமுறை எடுத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தேன்.
வேலைநாட்களில் இரவு நேரத்தில் நான் முதலாளியின் பங்களாவில்தான் தூங்குவேன். ஏனென்றால் முதலாளியும் அவர் குடும்பத்தினரும் கோலாப்பூரில் இருப்பார்கள். ஆனால் அன்றைக்குப் பயணக் களைப்பு காரணமாக இரவு என் வீட்டிலேயே தூங்கிவிட்டேன். மறுநாள் வழக்கம்போல அதிகாலையிலேயே எழுந்து முதலாளியின் மாட்டுத்தொழுவத்திற்குச் சென்று பால் கறந்து எடுத்தேன். அந்தப் பாலைக் கூட்டுறவுச் சங்கத்தில் கொடுத்துவிட்டு, காலை 7 மணிவாக்கில் பங்களாவுக்குப் போனேன். அங்கே போய் பார்த்தால்...
...பங்களாவின் கதவு பாதியளவு திறந்திருந்தது. உள்ளே போய் பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி, உடம்பெல்லாம் வேர்த்துக்கொட்டியது. உள்ளே பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. திருட்டு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். பயத்தில் மனதிற்குள்ளேயே பாப்புவை வேண்டிக்கொள்ள ஆரம்பித்தேன். உடனே முதலாளிக்கு போன் செய்து நடந்த விஷயத்தைச் சொன்னேன்.
கொஞ்ச நேரத்தில் முதலாளி வந்தார். பங்களா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். அப்புறம் அவர் எங்களிடம், பீரோவை உடைத்து அதிலிருந்த 20 சவரன் தங்கம், 35 கிலோ வெள்ளி மற்றும் கொஞ்சம் ரொக்கப் பணம் சேர்த்து மொத்தம் ஏறக்குறைய ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகச் சொன்னார்.
ஒரு நிமிஷம் அதைக் கேட்ட நாங்கள் அனைவரும் வாயடைத்துப் போய் நின்றோம். அப்புறம் முதலாளி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து கொள்ளை நடந்த விஷயத்தைச் சொன்னார். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்தது. அவர்கள் விசாரணையைத் தொடங்கினார்கள். நான் எப்போதும் செய்யும் வேலையாக முதலாளியின் நண்பர்களுக்குத் டீ, தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென முதலாளி என்னை மேல்மாடிக்கு வருமாறு கூப்பிட்டார்.

அங்கே முதலாளியும் போலீஸ் அதிகாரியும் இருந்தார்கள். முதலாளி அனேகமாக சந்தேகத்தின் பேரில் என் பெயரைத்தான் சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி என்னை அருகில் கூப்பிட்டு, என் சட்டைக் காலரைப் பிடித்துக்கொண்டு, கோபமாக சத்தம்போட்டுத் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கியைத் தொட்டபடியே, "சஞ்சா, லேகா... திருடப்பட்ட சொத்துக்களும் திருடர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று இப்போதே ஒழுங்காகச் சொல்லிடு, இல்லைனா உனக்கு முடிவு சரியிருக்காது" என்றார். அந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்குக் காலடி மண்ணே நழுவுவது போல் இருந்தது. எந்த வீட்டில் கடந்த 6 வருடங்களாக உண்மையாகவும் நேர்மையாகவும் வேலை செய்தேனோ, குடும்பத்தில் ஒரு ஆளாக இருந்தேனோ, அந்த முதலாளியே என் மீது பழி சுமத்துகிறாரே, குற்றம் சாட்டுகிறாரே என்பதை நினைத்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால் நான் என்னைச் சமாளித்துக்கொண்டு, மனதிற்குள் ஹரி ஓம் பாப்பு என்று நினைத்துக் கொண்டேன். என் காலரைப் பிடித்திருந்த அந்த அதிகாரியின் கையை விலக்கிவிட்டு, "சார், சும்மா என் மேல பழி போடாதீங்க, இந்த கொள்ளைக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று மட்டும்தான் சொன்னேன். அதற்கு அந்த அதிகாரி மீண்டும் கோபமாகக் கத்தி, "ஏய், சும்மா பொய் சொல்லி நாடகமாடாதே. நீ சாமி கும்பிடப் போன அப்புறமே இந்த நிலமையில கொள்ளை எப்படிடா நடக்கும்? நீதான் திருடர்களுக்கு எல்லா தகவலையும் கொடுத்துட்டு, சந்தேகம் வரக்கூடாதுன்னு சாமி கும்பிடுற மாதிரி நாடகமாடியிருக்கே. எங்கயாவது ஜாலியா சுத்திட்டு இருந்திருப்ப. பேசாம உண்மையெல்லாம் சொல்லிடு, இல்லைனா உன்னை..." என்றார்.
நான் முற்றிலும் நிரபராதி. நான் முதலாளியிடம், "முதலாளி, எனக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது. நீங்க என் மேல எவ்வளவு பொய் பழி போட்டாலும், நான் பயந்துபோய் இல்லாததைச் சொல்ல மாட்டேன்" என்றேன். (மனதிற்குள் மட்டும் ஹரி ஓம் பாப்பு! என்னை இதிலிருந்து காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொண்டேன்.)
ஆனால் என் முதலாளிக்கு, நான் அந்தத் திருடர்களுக்கு உதவி செய்திருக்கிறேன் என்றுதான் தோணத் தொடங்கியது. அதனால் அவர்கள் என் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்க வேண்டும். முதலாளி சொன்னதன் பேரில் போலிஸ் என்னைச் சந்தேக நபராகக் கைது செய்து, கையில் விலங்கு மாட்டி போலீஸ் வேனில் ஏற்றினார்கள். வண்டி போலீஸ் ஸ்டேஷனை நோக்கிப் புறப்பட்டது.
நடந்த சம்பவங்களால் என் மண்டைக்குள் எண்ணங்களின் புயலே வீசிக்கொண்டிருந்தது. நான் கண்ணை மூடிக்கொண்டு மனதுக்குள்ளேயே பாப்புவிடம் பேசத் தொடங்கினேன். பாப்பு, என் வாழ்க்கையில் இப்படி ஒரு கெட்ட நேரத்தை வர எப்படி விட்டீர்கள், இதை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா? என்று பாப்புவையே குறை சொல்ல ஆரம்பித்தேன்.
நான் மனதிற்குள் இந்த வார்த்தையைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, திடீரென வேனின் பிரேக் சடாரெனச் சத்தத்துடன் போடும் சத்தம் கேட்டது. நான் திடுக்கிட்டு கண்ணைத் திறந்து வண்டி ஏன் நின்றது என்று பார்க்க முன்னாடி பார்த்தேன், ஒரு பசு மாடு திடீரென வண்டிக்குக் குறுக்கே வந்ததால் டிரைவர் அப்படிச் செய்திருந்தார். வண்டியில் இருந்த அனைவரும் மீண்டும் தங்களைச் சரிசெய்து கொண்டு உட்கார்ந்தார்கள். அதற்குப் பிறகு திடீரென ஒரு கான்ஸ்டபிள் என்னிடம், "நீ திருட்டில் சம்பந்தப்பட்டிருக்காயா இல்லையான்னு அப்புறம் தெரியும், ஆனா நான் ஒன்னு மட்டும் சொல்றேன்... நீ நிரபராதியா இருந்து, அந்த கொள்ளை நடந்த ராத்திரி நீ அந்த பங்களாவிலேயே தூங்கியிருந்தா, இந்தத் திருடனுங்க முதல்ல உன்னைக் கொன்னுட்டுதான் அப்புறம் கொள்ளையடிச்சிருப்பானுங்க. இது என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல சொல்றேன்" என்றார். அவ்வளவு சொல்லிவிட்டு அவர் அமைதியாகிவிட்டார்.
யாரோ ஆழ்ந்த தூக்கத்திலிருந்து என்னைச் சடாரென உலுக்கி எழுப்பியது போல் இருந்தது. உண்மையிலேயே உடம்பெல்லாம் சிலிர்த்துப் போய் மயிர் கூச்சரிந்தது. அதாவது பாப்பு என்னை ஆபத்தில் தள்ளவில்லை, மாறாக என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார், நானோ பாப்புவைக் குறை சொல்லிக்கொண்டிருந்தேன். என் கண்கள் கலங்கின, நான் மனதார பாப்புவிடம் மன்னிப்பு கேட்டேன்.

உண்மையில் நான் சாமி தரிசனம் செய்யப் போகும் தேதியைச் கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதே நேரத்தில் நான் ஊருக்குப் போக வேண்டும் என்பது அந்தத் தயாள குணமுள்ள சத்குரு தத்துவத்தால் 108% திட்டமிடப்பட்டதுதான். கொள்ளை நடந்த நேரத்தில் நான் பங்களாவில் இருந்திருந்தால், ஒருவேளை அந்தத் திருடர்கள் என் பிணத்தைத்தான் போட்டிருப்பார்கள்.
இந்த எண்ணம் மனதில் ஆழமாகப் பதிந்ததும், பாப்புவின் மீதான என் நம்பிக்கை மேலும் அதிகரித்தது. என் பாப்பு என்னை இந்தச் சோதனையிலிருந்து கண்டிப்பாய் வெளியே கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு, இனிமேல் வரும் எதையும் எதிர்கொள்ள நான் தயாரானேன்.
போலீஸ் வேன் ஸ்டேஷனை அடைந்தது. என்னை லாக்கப்பில் அடைத்தார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு என் மனைவியும் குழந்தைகளும் மனதளவில் மிகவும் உடைந்துபோனார்கள். நான் நிரபராதி என்பதில் அவர்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஜெயிலில் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணத்தில் அவர்களும் கவலையில் மூழ்கினார்கள்.
நான் கைதான மறுநாள் செய்தித்தாள்களில் கொள்ளை நடந்த செய்தி முதல் பக்கத்திலேயே வந்தது. என் பெயர் ஒரு கட்டத்திற்குள் பெரிய எழுத்துக்களில் சந்தேக நபர் என்று அச்சிடப்பட்டிருந்தது. நான் கைதான செய்தி ஊர் பூராவும் பரவியது. அதனால் என் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவது கூட கஷ்டமாகிவிட்டது.
இங்கே போலீஸ் ஸ்டேஷனில், நான் திருடர்களோடு சேர்ந்திருக்கிறேன் என்று நினைத்த போலிஸ் என்னிடமிருந்து வாக்குமூலம் வாங்குவதற்காக மென்மையான வழிகளிலிருந்து கொடூரமான முறைகள் வரை அனைத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
இதில் ஒருமுறை, என் மன தைரியத்தை உடைத்து என்னை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காக, கைகளில் கயிற்றைக் கட்டி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஊரின் முக்கிய வீதி வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். நான் பிறந்து வளர்ந்த ஊர், அங்கிருந்த எல்லாரும் தெரிந்தவர்கள், அதனால் நான் தலையைக் குனிந்தபடியே நடந்து சென்றேன். அதனால் எனக்கு என் கழுத்தில் இருந்த பாப்புவின் லாக்கெட் (ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்தபோது நான் கழற்ற மறுத்துவிட்டேன்) மற்றும் அதில் இருந்த பாப்புவின் போட்டோ மட்டுமே தெரிந்தது. மனதிற்குள் பாப்புவின் நாமஜபம் ஓடிக்கொண்டிருந்தது, என் கண்ணீரால் பாப்புவுக்குத் தானாகவே அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. பாப்பு கண்டிப்பாய் இதிலிருந்து ஏதோ ஒரு வழி காட்டுவார் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.
அதேபோல் அடுத்த ஏழு நாட்களுக்கு இன்னும் பல கொடுமையான சித்திரவதைகள் என்மீது ஏவப்பட்டன. நான் மனதிற்குள் பாப்புவின் நாமத்தை மட்டுமே சொல்லி அதையெல்லாம் பொறுத்துக்கொண்டேன்.
இத்தனை விஷயங்கள் நடந்தும் பாப்பு மீதிருந்த என் நம்பிக்கை குறையவில்லை. என்னை ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்த பிறகு என் குடும்பத்தினர் என்னை முதன்முதலாகப் பார்க்க வந்தபோதே, பாப்பு ஆசிர்வதிப்பது போன்ற போட்டோ முகப்பில் உள்ள கிருபாசிந்து பத்திரிகையையும், வழிபாட்டிற்குத் தேவையான மற்ற பொருட்களையும் வரவழைத்துக் கொண்டேன். தினமும் ,அனிக், ॐ मनःसामर्थ्यदाता श्री अनिरुद्धाय नमः (ஓம் மனசாமர்த்திய தாதா ஸ்ரீ அனிருத்தாய நம:) என்ற தாரக மந்திரம், மற்ற வழிபாடுகள், ஆரத்தி எல்லாம் தவறாமல் செய்து வந்தேன். அத்துடன் சில பென்சில்களையும் வரவழைத்துக் கொண்டேன். அதைக் கொண்டு ஜெயில் சுவர்களில் பாப்புவின் நாமத்தை எழுதுவேன். நான் லாக்கப்பில் இருந்த நாட்களில் ஒரு சுவரே ஜபத்தால் நிறைந்துவிட்டது.
இதனால்தான் இந்தப் பயங்கரமான சூழ்நிலையை எதிர்கொள்ள எனக்கு மன தைரியம் நிலைத்திருந்தது என்று நினைக்கிறேன். எந்தளவுக்கு என்றால், ஒருமுறை ஒரு கான்ஸ்டபிள் பொறுக்க முடியாமல் என்மேல் கத்தினார், "நீ என்ன மனுஷனா இல்ல மிருகமா? இவ்வளவு நடக்குது, ஒரு வார்த்தை கூட முனக மாட்டேங்குற. மத்த கைதிகளை நாங்க இழுத்துட்டு வர வேண்டியிருக்கு, நீ என்னடான்னா உன் சொந்தக் காலிலேயே நடந்து வர்ற."
நான் திரும்பிப் பார்த்து அவரிடம், "என் அப்பா.... என் சத்குரு அனிருத்த பாப்பு என்னோடுதான் இருக்கிறார். அவர்தான் இந்த கஷ்டத்தைத் தாங்கும் சக்தியை எனக்குக் கொடுக்கிறார், இனியும் கொடுப்பார், இது என் தீர்க்கமான நம்பிக்கை" என்றேன். அவர் என்னையே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு நின்றார்.
ஜெயிலில் என்னை வந்து பார்ப்பதற்கு என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர்கள் வந்து பார்ப்பார்கள். அப்படி வந்தபோது என் மனைவி சொன்னாள், என் தாய்-தந்தையரும் நான்தான் குற்றவாளி என்று நினைத்ததால் என்னை ஜெயிலில் வந்து பார்ப்பதைத் தவிர்த்துவிட்டார்கள் என்று. இந்தச் செய்தியைக் கேட்டு நான் இன்னும் உடைந்துபோனேன். ஆனாலும் இன்னும் தீவிரமாக வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினேன்.
இப்படியே எட்டு நாட்கள் கழிந்தன. எட்டாவது நாள் வழக்கம்போல பாப்புவின் வழிபாடு.... நாள் முழுவதும் திட்டமிட்டபடி நடந்தது.... மாலை நேரமானது. மனைவியும் குழந்தைகளும் பார்க்க வந்தார்கள். இன்று என்னவோ தெரியவில்லை, அவர்களைப் பார்த்ததும் என் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. அவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகக் கண்ணைத் துடைத்துக்கொண்டு என்னைச் சமாளித்துக் கொண்டேன். ஏனென்றால் போலிஸ்களின் உயிரை வாங்கும் விசாரணை, சமூகத்தில் ஏற்பட்ட அவமானம், மனைவி, குழந்தைகள், தாய்-தந்தையரின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை என அனைத்து எண்ணங்களாலும் நான் மிகவும் உடைந்து சோர்ந்து போயிருந்தேன். அதனால்தான் என் கண்ணில் தண்ணீர் வந்திருக்க வேண்டும்.
முதலில் குழந்தைகளிடம் நிதானமாகவும் மனம்போலவும் பேசினேன். சில பொறுப்பான விஷயங்களைச் சொன்னேன். "அம்மாவையும் பாட்டி-தாத்தாவையும் பார்த்துக்கோங்க" என்று சொன்னேன், ஆனால் மீண்டும் என் கண்கள் கலங்கின. மனைவியும் குழந்தைகளும் அழத் தொடங்கினார்கள். அப்புறம் அவர்களைத் தேற்றி, "பாப்பு இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார், நீங்கள் தைரியத்தை விடாதீர்கள்" என்றேன்.
அதன்பிறகு குழந்தைகளை வெளியே போகச் சொல்லிவிட்டு, என் மனைவி அமிதாவிடம் பேசத் தொடங்கினேன். அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே சந்திப்பு நேரம் விரைவில் முடியப் போகிறது என்று தோன்றியது. அமிதாவிடம் என் மனந்திறந்து பேசினேன். நடுவில் ஒருமுறை வெளியே இருந்த பெண் கான்ஸ்டபிள் கத்தி, "நேரம் முடிந்தது" என்றார்.
அமிதா கிளம்பிக்கொண்டிருந்தாள். நான் அவள் கையைப் பிடித்து நிறுத்தி, "இப்போ எனக்கு ரொம்ப தளர்ச்சியா இருக்குடி. பாப்புவின் நினைவால் வந்த சக்தியினால்தான் இதுவரைக்கும் எல்லாத்தையும் தாங்கினேன், ஆனா இனிமே தாங்க முடியலடி. ரொம்ப கஷ்டமா இருக்கு! நான் உன்கிட்ட உண்மையாச் சொல்றேன், நாளைக்குக் காலைல பாப்புவை கும்பிட்ட அப்புறம் நான் என்னையே முடிச்சுக்கப் போறேன். நீ குழந்தைகளை ஒழுங்கா பார்த்துக்கோ. அவங்களுக்கு நல்ல கல்வி கொடுக்க முயற்சி செய்" என்றேன்.
என் இந்த வார்த்தையைக் கேட்டு அவள் இன்னும் அதிகமாக அழத் தொடங்கினாள். "அப்படியெல்லாம் எதுவும் செய்யாதீங்க" என்று கெஞ்சிக்கொண்டே இருந்தாள். அதற்குள் வெளியிலிருந்து ஒரு பெண் கான்ஸ்டபிள் உள்ளே வந்து என் மனைவியின் கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றார். கலங்கிய கண்களோடு அவள் வெளியே போகும்போது கூட என்னிடம் பேச முயற்சி செய்து கொண்டிருந்தாள். நாங்கள் இருவரும் இன்னும் நிறையப் பேச வேண்டியிருந்தது, ஆனால் நேரம் முடிந்துவிட்டது.
மாலை 7 மணியானது. அன்றைய இரவு உணவைக்கூட நான் சாப்பிடவில்லை. இரவில் தூங்குவதற்கு முன் பாப்புவை நினைத்து, நாமஜபம் செய்து பாப்புவிடம், "பாப்பு, என் மனநிலை உங்களுக்குத் தெரியும். உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என்று மட்டும் சொல்லிவிட்டுத் தூங்க முயற்சி செய்தேன். ஆனால் மண்டைக்குள் ஓடிய எண்ணங்களின் புயலால் எனக்குத் தூக்கமே வரவில்லை.
இரவுமுழுவதும் நான் விழித்தே இருந்தேன். அதிகாலை 4 மணியானது. நான் படுக்கையிலிருந்து எழுந்தேன், என்னை மாய்த்துக் கொள்ளும் தீர்க்கமான முடிவோடு!
நான் குளித்துவிட்டு வந்தேன். வழக்கமாக உட்காரும் வழிபாட்டு இடத்தில் உட்கார்ந்தேன். கிருபாசிந்து பத்திரிகையை முன்னாடி வைத்தேன். அதில் பாப்பு ஆசிர்வதிப்பது போன்ற போட்டோ இருந்தது. வழிபாட்டை முடித்தேன். அனிக்கும் செய்தேன். பாப்புவுக்கு ஆரத்தி எடுத்தேன், அப்புறம் கண்ணை மூடி மீண்டும் ஒருமுறை பாப்புவை மனதார வணங்கினேன். மனதிற்குள் மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டேன்.
என்னிடம் சவரம் செய்வதற்காக வைத்திருந்த பிளேட் பாக்கெட் இருந்தது. அதிலிருந்து ஒரு பிளேட்டை வலது கையில் பிடித்து, இடது கையின் நரம்பை அறுப்பதற்காக அதன்மேல் வைத்தேன்.
காலை 5 மணி இருக்கும். இங்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே நான் என் உயிரை மாய்த்துக்கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தேன், அதே நேரத்தில் வெளியே போலீஸ் ஸ்டேஷனின் லேண்ட்லைன் போன் மணி வெகுநேரமாக அடித்து ஓய்ந்தது.
மூன்றாவது முறை லேண்ட்லைன் போன் அடித்தபோது, நான் நரம்பை அறுத்துக்கொள்ள மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டிருந்தேன். 'செய்யலாமா வேண்டாமா' என்ற போராட்டம் என் மனதில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நடந்தது. அதற்குள் கான்ஸ்டபிள் கத்திக்கொண்டே என்னை நோக்கி ஓடிவந்து, "அடேய் சஞ்சா.... லேகா! நீ தப்பிச்சடா, அந்தத் திருடனுங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாட்டிக்கிட்டானுங்க!" என்றார்.
அவர் சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டதும் என் உடம்பெல்லாம் ஆனந்தத்தால் சிலிர்த்தது. கண்ணிலிருந்து பொலபொலவென்று ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. நான் பிளேட்டை தூக்கி எறிந்தேன். முன்னாடி பாப்புவின் போட்டோ இருந்தது. நான் அழுதுகொண்டே அந்த போட்டோவுக்கு முன்னாடி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டேன். என் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. நான் சத்தமாக கத்தினேன், "பாத்தீங்களா, நான் சொன்னேன்ல... 'பாப்பு என் சத்குரு, என் தகப்பன், அவர் என்னைக் காப்பாத்துவார்'னு!"
அவர் என்னை லாக்கப்பிலிருந்து வெளியே எடுத்தார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த மற்ற கான்ஸ்டபிள்களும் கைதிகளும் என் சத்தத்தைக் கேட்டு முழித்து ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள்.
அந்த போன் இச்சல்கரஞ்சி போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்திருந்தது. போலீஸ் அதிகாரி முதன்மையாளரே அப்போது போனில் பேசிக்கொண்டிருந்தார். கொள்ளையடித்த அந்தத் திருடர்கள் இச்சல்கரஞ்சி பேருந்து நிலையத்தில் அதிகாலை 4.30 மணிக்கு நகைகளோடும் பணத்தோடும் கைதாகியிருப்பதாகவும், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதேபோல், "உங்கள் ஸ்டேஷனில் கைதாகி இருக்கும் சந்தேக நபரான சஞ்சய் ஜாதவை உடனே விடுவியுங்கள். நாங்கள் போலீஸ் வேனில் அந்தத் திருடர்களை உங்களிடம் அழைத்து வந்துகொண்டிருக்கிறோம்" என்றும் சொன்னார்.
அதன் பிறகு எங்கள் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரியும் மற்ற ஊழியர்களும் என்னிடம் மரியாதையாகப் பேசத் தொடங்கினார்கள்.
ஸ்டேஷன் அதிகாரி, "அட, நீ சொன்ன மாதிரியே நிஜமாவே உன் பாப்பு உன்னைக் காப்பாத்திட்டாருப்பா!" என்று கூட சொன்னார்.
அப்புறம் அவர்கள் என்னிடம் "யார் இந்த பாப்பு? எங்கே இருக்கிறார்?" என்று விசாரித்தார்கள். நான் பாப்புவின் பக்தனாக மாறிய கதையை விரிவாகச் சொன்னேன். அதன்பிறகு அவர்களிடம் படிக்க 'கிருபாசிந்து' பத்திரிகையைக் கொடுத்தேன். அவர் நாற்காலியில் உட்கார்ந்து பத்திரிகையைப் புரட்டத் தொடங்கினார். நான் எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன்.

ஆனால் என் கவனம் எங்கள் பேச்சில் இல்லை. என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, 'பாப்பு இதை எப்படிச் சாத்தியமாக்கினார்? உண்மையில் என்ன நடந்திருக்கும்?'
இப்படி பல கேள்விகள் மனதில் வந்தன, ஒரே ஆவலாக இருந்தது. சாருக்கும் எனக்கும் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே, இச்சல்கரஞ்சியிலிருந்து அந்த போலீஸ் வேன் எங்கள் ஸ்டேஷனுக்குத் திருடர்களை அழைத்துக்கொண்டு வந்தது. அவர்கள் நான்கு பேர், நால்வரும் சேர்ந்துதான் கொள்ளையடித்திருந்தார்கள். எங்கள் ஸ்டேஷன் அதிகாரி முதலில் அந்தத் திருடர்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி, "இவரை உங்களுக்குத் தெரியுமா? திருடுவதற்கு இவர் உங்களுக்கு ஏதேனும் உதவி செய்தாரா?" என்று கேட்டார்.
அதற்கு அந்தத் திருடர்களில் ஒருவன், "எங்களுக்கு இவரைத் தெரியாது" என்று தெளிவாகச் சொன்னான். ஆனால் இதைச் சொல்லும்போது அவனது பார்வை அதிகாரியின் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த பாப்புவின் 'கிருபாசிந்து' பத்திரிகையின் மீதே இருந்தது, இதைச் சொல்லிக்கொண்டே அவன் மேஜை அருகில் வந்தான்.
அவன் முகத்தில் ஒரு கேள்விக்குறி இருப்பது தெளிவாகத் தெரிந்தது. அவன் அதிகாரியிடம் அனுமதி கேட்டு 'கிருபாசிந்து' பத்திரிகையைக் கையில் எடுத்தான். அந்தப் பத்திரிகையின் முகப்பில் இருந்த பாப்புவின் போட்டோவையே அந்தத் திருடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்டேஷனில் இருந்த அனைவரும் அந்தத் திருடனையே ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
சில விநாடிகளுக்கு அங்கே மயான அமைதி நிலவியது....

திடீரென அந்தப் பத்திரிகையில் இருந்த பாப்புவின் போட்டோவை அதிகாரியிடம் காட்டி அந்தத் திருடன் கேட்டான், "சார், இவர் யார்? திருடிய கணத்திலிருந்தே இவர் எங்களுக்குப் பின்னாலேயே வர்ற மாதிரி எங்களுக்குத் தோணிக்கிட்டே இருக்கு. இவர் திடீர்னு தெரிவாரு, திடீர்னு மறைவாரு. இவராலதான் நாங்க தப்பிச்சுப் போற பிளான் அடிக்கடி மாறிகிட்டே இருந்தது, இல்லைனா நாங்க எப்பவோ தப்பிச்சிருப்போம். ஏதோ போலீஸ் அதிகாரி மாதிரி இவர் இருந்ததால நாங்க ரொம்ப பயந்துட்டோம். இன்னைக்குக் கூட காலையில இச்சல்கரஞ்சி பஸ் ஸ்டாண்டுக்கு போனப்போ, இவர் அங்கே எதிரில் இருந்த பெஞ்ச்ல உட்கார்ந்திருக்காரோன்னு எங்களுக்குத் தோணுச்சு. யார் இவர்? நிஜமாவே இவர் போலீஸ் அதிகாரியா?" என்று பல கேள்விகளைக் கேட்டுவிட்டு அவன் அமைதியானான்.
அவன் சொன்ன அந்த வார்த்தைக்குப் பிறகு என் உடம்பில் மீண்டும் ஒருமுறை மயிர் கூச்சரிந்தது. என் கண்ணில் தண்ணீர் பெருகியது. இதைப்படிக்கும் எவருக்காவது 'இது எப்படி சாத்தியம்?' என்று நிச்சயம் தோன்றும். ஆனால் எது நடந்ததோ, எது கேட்கப்பட்டதோ, எது சொந்தமாக அனுபவிக்கப்பட்டதோ அதுவே முழு உண்மை. இருக்கட்டும். இப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலையிலிருந்தும் பொய்யான பழியிலிருந்தும் என் பாப்புதான் என்னைக் காப்பாற்றினார் என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. பாப்புராயா, உன்னுடைய நம்பிக்கையுள்ள பக்தர்களுக்கு எப்போதும் சாத்தியமில்லாதது சாத்தியமாவதை நாங்கள் பார்க்கிறோம். இன்று நானும் என் குடும்பத்தினரும் சந்தோஷமாகவும் சுகமாகவும் இருக்கிறோம் என்றால், அதற்கு நீ மட்டுமே காரணம்! எங்களிடமிருந்து இத்தகைய பக்தியையும் சேவையையும் நீயே தொடர்ந்து பெற்றுக்கொள். பாப்பு, நீயே எங்கள் சத்குரு, நண்பன், தந்தை, எல்லாமும்!

Comments
Post a Comment